மனப் பிறழ்ச்சிக் குறைபாடு

மனப் பிறழ்ச்சிக் குறைபாடு

14 வயதான சிறுமி கார்த்திகா, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆங்கிலத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென அதிக தலைவலியுடன் மயங்கி விழுந்தாள். உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளித்த பிறகும், அவளுக்கு தொடர்ந்து தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் மனநல மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டாள்.

உளவியல் ஆய்வில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவாள் என்று அவளுடைய பெற்றோரும் ஆசிரியரும் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமா என்ற ஆழ்மனப் பயத்துடன் கூடிய பெரும் போராட்டத்தை அவள் எதிர்கொண்டிருப்பது தெரியவந்தது. அதை வெளியில் சொல்ல முடியாத ஆழ்மனப் போராட்டம் ஒரு கட்டத்தில் அதீத தலைவலியாக வெளிப்பட்டது.

தகுந்த உளவியல் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்ட பின்னர், அவள் 480 மதிப்பெண்கள் பெற்று தற்போது மேற்படிப்பைத் தொடர்கிறாள்.

ஆழ்மன நம்பிக்கைகளும் குழப்பங்களும்

ஆழ்மனதில் உள்ள குழப்பங்களும் பயங்களும் நம் வாழ்வை வெகுவாக பாதிக்கக்கூடியவை. நம் ஆழ்மனதில் உள்ள குழப்பங்களையோ பயங்களையோ வெளியில் சொல்ல முடியாமல் போனால், அது ஒரு கட்டத்தில் உடல்நலக் குறைபாடு அல்லது நரம்பியல் அறிகுறிகளாக வெளிப்படலாம். இவ்வாறு சுயநினைவில் மாற்றம் ஏற்படுதல் அல்லது உடல் மற்றும் நரம்பியல் அறிகுறிகள் தோன்றுதல் போன்ற நிலைகளுக்கு மனப் பிறழ்ச்சிக் குறைபாடு என்று குறிப்பிடப்படுகிறது.

Functional Neurological Disorder (FND) தொடர்பான வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.

தன்னுடைய ஆழ்மனப் போராட்டத்துடன் தொடர்புடைய காரணங்களால் தனக்கு இவ்வாறு நிகழ்கிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணர முடியாமல் இருக்கலாம். நோயாளி நடிப்பதில்லை; அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளும் உண்மையானவையே. அவை மனஅழுத்தம், அதிர்ச்சி, பயம், குழப்பம் அல்லது பிற காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

கலாச்சாரத்துடன் தொடர்புடைய சில வெளிப்பாடுகள்

இதுபோன்ற சில ஆழ்மன வெளிப்பாடுகள் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போனவையாக இருக்கலாம். உதாரணமாக, சாமியாடுதல், பேய் அல்லது பிசாசு தனக்குள் புகுதல் போன்ற நம்பிக்கைகள் சில சமூகங்களில் காணப்படுகின்றன.

ஆழ்மனதில் ஒருவர் ஆழமாக நம்பும் விஷயங்கள் அவர்களின் உணர்வுகளிலும் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்நிலைக்கான ஓர் உதாரணம்

ஒரு குழந்தை கணிதத்தில் சுமாராகப் படிப்பதாகக் கருதுங்கள். ஆனால் அவனுடைய கணித ஆசிரியரும் பெற்றோரும் அவனிடம் கணிதப் பாடத்தைப் படிப்பது தொடர்பாக மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு கணிதத் தேர்வு நாள் வருகிறது. அதற்கு முந்தைய நாளிலிருந்தே அவன் மிகவும் பயத்துடன் காணப்படுகிறான். பெற்றோரிடம் சொல்லவும் பயம்; தேர்வை எழுதவும் பயம்.

இந்த இருமுனைச் சிக்கலில் தவித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. அவனுடைய மனம் தற்காலிகமாக மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க முடியாது.

மாற்றாக, குறிப்பிட்ட தேர்வு நாளன்று அவனுடைய உடல்நிலை சரியில்லாததால் தேர்வு எழுதச் செல்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுகிறது. அப்போது பெற்றோரும் ஆசிரியரும் அவனைத் திட்டாமல் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்த அனுபவம் அவனுடைய ஆழ்மனதில் ஒரு தொடர்பை உருவாக்கக்கூடும். பின்னர் பயம், அழுத்தம் அல்லது அவமானம் ஏற்படுத்தும் சில சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்க உடல் அறிகுறிகள் வெளிப்படலாம்.

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம். குறிப்பாக குடும்பத்திலும் சமூகத்திலும் அதிக நெருக்கடியையும் அழுத்தத்தையும் எதிர்கொள்பவர்கள் இத்தகைய அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.

இதன் அறிகுறிகள்

  1. சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை சுயநினைவில் மாற்றம் ஏற்பட்டு பேசுதல், ஆடுதல், சத்தம் போடுதல், எங்காவது செல்லுதல் போன்ற நடத்தைகள் காணப்படலாம்.
  2. அடிக்கடி திடீர் மயக்கம், அதிக தலைவலி அல்லது வலிப்புப் போன்ற நிலைகள் ஏற்படலாம்.
  3. தெளிவான உடல் காரணம் கண்டறியப்படாத நிலையில் வயிற்றுவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
  4. திடீரென உடல் மதமதப்பாக உணரப்படுதல் அல்லது பார்வை தெரியவில்லை என்று கூறுதல் போன்ற உணர்வியல் அறிகுறிகள் ஏற்படலாம்.
  5. குறிப்பிட்ட சில வாழ்க்கைச் சம்பவங்களை மறந்து போதல் அல்லது தன்னிலை மறந்து வேறு இடத்திற்குச் செல்லுதல் போன்ற நிலைகள் ஏற்படலாம்.
  6. தனக்குள் வேறு ஒருவர் இருப்பது போலவோ அல்லது தானே வேறு ஒருவர் போலவோ நடந்துகொள்ளும் அனுபவம் இருக்கலாம்.

முக்கிய காரணிகள்

  1. ஆழ்மன நம்பிக்கைகள் அல்லது பயங்கள்
  2. தீராத வாழ்க்கைப் பிரச்சினைகள்
  3. அதீத பயம் மற்றும் குழப்பநிலை
  4. திடீர் அதிர்ச்சிகரமான சம்பவங்கள்
  5. மரபணு மற்றும் கலாச்சார தொடர்புகள்

சிகிச்சை முறைகள்

மனப் பிறழ்ச்சிக் குறைபாடு போன்ற அறிகுறிகளுக்கு காரணமாக இருக்கும் உளவியல் மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளை புரிந்துகொள்வது முக்கியம். நோயாளியின் மனநிலையைப் பாதிக்கும் காரணிகளை உளவியல் ரீதியாக ஆராய்ந்து, அவற்றைச் சமாளிக்க உதவ வேண்டும்.

அதேவேளையில் நோயாளியின் பயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல் அல்லது நரம்பியல் அறிகுறிகளுக்கும் மனநல மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும்.

குடும்பத்தினருக்கும், நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கும்—பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில நேரங்களில் ஆசிரியர்களுக்கும்—தகுந்த உளவியல் ஆலோசனை வழங்குவது பயனுள்ளதாக இருக்கலாம்.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதும் அவசியமாகும்.